chennai govt buses in chennai : ஐந்து மாத காலத்திற்கு பிறகு சென்னையில் இன்று (செப் 1) முதல் மாநகர பேருந்து சேவை துவக்கப்பட உள்ளது இதற்கான அறிவிப்பினை அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதனையடுத்து நேற்று சென்னை மாநகர போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பது, பேருந்துகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் பணிமனை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முன்பு போல அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு, அனைத்து பஸ்களும் இயங்குமா என்பது சந்தேகம் தான்..நோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை விதிகள், அரசு உத்தரவின் படி கடைப்பிடிக்கப்படும். பயணிகள் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும். பஸ்கள் இயங்கும் போது, தினந்தோறும் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களை கணக்கில் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
நீண்ட விடுமுறையில் இருந்த கண்டக்டர், டிரைவர்கள் அனைவரும், இன்று, 1ம் தேதி பணியில் இணைய உத்தரவிடப்பட்டுள்ளது.அதே போல், முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே, 60 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதிக்கப்படுவர்.கிருமிநாசினி தெளித்தல், உடல்வெப்பநிலை கண்டறிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இன்று முதல் தனியார் நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் போக்குவரத்து அதிகரிக்கும். இதுவரை மோட்டார் சைக்கிள்கள், கார்களில் பயணித்த ஏராளமான பயணிகளும் இன்று பஸ் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள். மக்கள் போக்குவரத்தில் பிரதான போக்குவரத்துகளில் ஒன்றான மின்சார ரெயில் போக்குவரத்தும் இல்லை என்பதால் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகக்கவசம் அணியாத பயணிகள் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், பயணிகள் பஸ்களில் இருந்து எச்சில் துப்புவதற்கும் அனுமதிக்கப்படுவது இல்லை.சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 33 பணிமனைகளில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 300 மாநகர பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.பஸ்களில் 22 முதல் 24 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். அதாவது, ஒரு இருக்கைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
பயணிகள் பேருந்தில் ஏறும் முன் கிருமி நாசினி கொடுக்கப்பட்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.