சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் போதைப்பொருள் உலவுவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் பயிற்சி மருத்துவ மாணவர்கள் 3 பேர் மற்றும் கஞ்சா சப்ளை செய்த தனியார் கொரியர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி அறைகளில் கஞ்சா, கேட்டமைன் ஊசி வடிவில் வைத்து இருந்ததைக் கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் உலவுவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் போலீசில் அளித்தார். இந்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீசார், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கக்கூடிய விடுதி அறையில் திடீர் சோதனை நடத்தினர். குறிப்பாக விடுதி எண் டவர் 3-ல் தங்கியிருந்த பயிற்சி மருத்துவர்கள் தருண், சஞ்ஜய், ரத்தினவேல் உள்ளிட்டோரின் அறைகளை சோதனை செய்தபோது, 150 கிராம் கஞ்சா, கேட்டமைன் போதைப் பொருள் ஊசி வடிவில் இருந்ததையும் சிரிஞ்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, இந்த பயிற்சி மருத்துவர்களுக்கு இந்த போதைப்பொருட்களை சப்ளை செய்கின்றனர் என்று 3 பயிற்சி மருத்துவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கோட்டூர் பகுதியில் இருந்து ஒருவர் கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. மருத்துவ மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரோட்னி ரோட்ரிகோ என்றா நபரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் கிரீன் கஞ்சா என்ற விலை உயர்ந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரோட்னி ரோட்ரிகோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பி.பி.ஏ பட்டதாரியான இவர் புனித தோமையார் மலை மட்ரோடில் இருக்கக்கூடிய டெலிவரி லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும், இவருக்கு போதிய வருமானம் இல்லாததால், இதுபோன்ற கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் பயிற்சி மருத்துவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், இவர் இதே போல, சென்னையில் பல்வேறு நபர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை சப்ளை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், இவர் 15 ஆயிரத்துக்கு மேல் போதைப் பொருள் விற்பனை செய்திருப்பது போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.