சென்னையில் அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு, ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய நிலையில் சைதாப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்து கொண்ட ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர், பாவ - புண்ணிய பலன்கள், குருகுலக் கல்வி முறை ஆகியவை மட்டுமின்றி, மாற்றுத் திறனாளியாக பிறக்க முன்ஜென்ம பாவங்களே காரணம் என்று பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியருடன் மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசோக் நகர் பள்ளி முன்பு, பல்வேறு மாணவர் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த சூழலில், பள்ளிக்கல்வி துறை சார்பில் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ‘கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் துறை உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். மூடநம்பிக்கைகள் குறித்து பேசிய மகாவிஷ்ணு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், ”என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன்” என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.தமிழரசி, திருவள்ளூர் பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.சண்முகசுந்தரம், செங்கல்பட்டு அணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாவிஷ்ணு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காலையில் இருந்து நிறைய தகவல்களையும் செய்திகளையும் என்னால் பார்க்க முடிகிறது. அதிகமானோர் போன் செய்து பேசி இருந்தீர்கள். சிலர் மெசேஜ் அனுப்பி இருந்தீர்கள். ஊடகங்களில் தவறாக கருத்துகள் பேசப்படுகிறது. மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் போய் ஒளிந்துகொண்டாரா என்ற கேள்விகளையும் பார்க்க முடிகிறது. அடிப்படையாகவே நான் இந்தியாவில் இருக்கக்கூடிய ஆள் கிடையாது. இந்தியா உட்பட 6 நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. தொடர்ச்சியாக யோகா பயிற்சி வகுப்புகளையும் கொடுத்து வருகிறோம். அன்று காலை அசோக் நகர் பள்ளியிலும், பின்னர் சைதாப்பேட்டை பள்ளியிலும் நிகழ்ச்சி முடிந்த உடன் நான் ஆஸ்திரேலியா வந்துவிட்டேன்.
இதில் ஓடி ஒளிவதற்கான விஷயம் இல்லை. எதற்காக நான் ஓடி ஒளிய வேண்டும். ஓடி ஒளியக் கூடிய வகையில் என்ன தவறான கருத்தை சொல்லிவிட்டேன். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார் கொடுத்துள்ளனர். அதை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனரா அல்லது இன்னும் செய்யவில்லையா என தெரியவில்லை. பரம்பொருள் அலுவலகத்திலும் திருப்பூரில் உள்ள எனது இல்லத்திலும் காவல்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். நாளை மதியம் 1.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குவேன். தற்போதைய சூழலில் இந்தியாவில் இருப்பதையே நான் விரும்புகிறேன்” என மகா விஷணு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த நிலையில் மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் 192, 196(1) a, 352, 353(2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகா விஷ்ணுவை வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.