மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் உரை நிகழ்த்த மகாவிஷ்ணு என்பவர் அழைக்கப்பட்ட நிலையில் அவர் மந்திரம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதேபோல் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஒரேநேரத்தில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்து வரப்பட்டுள்ளார். 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று தெரிவித்ததோடு மறுபிறவி குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பேசியுள்ளார். மறுபிறவி, ஆன்மீகம் குறித்து பேசுவது பள்ளி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் என்று அங்கிருந்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களிடம் மகாவிஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? எனக் கேட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்? சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா? அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பள்ளியில் விசாரணைக்குழு நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“