சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி உயர்ந்திருப்பதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசை காரணமாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் இந்த நிலையில் சென்னையில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. சென்னையில் 1,62,284 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பில் நல்ல நிலையில் உள்ளது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வைக்காதவர்கள் 69,490 பேருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். மழை நீர் கட்டமைப்பை சரி வர பராமரிக்காத 38, 507 வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதித்துள்ளோம் என்றார் பிரகாஷ்.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத கட்டடங்கள், விரைந்து செயல்பட்டு அந்த அமைப்பை உருவாக்கிவிட வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முறையாக பராமரிக்காத வீடுகளின் உரிமையாளர்கள் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு துரிதமாக செயல்பட்டு மழைநீர் சேகரிப்பு வசதியை பயன்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்து எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லா சென்னையை பரிசளிப்போம் என்று இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உறுதிமொழியேற்போம்....