அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து எதிரொலியாக உள் நோயாளிகளின் உடன் வருபவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 4 வண்ணங்களில் வழங்கப்படும் இந்த டேக் முறை அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிர்ச்சி - மருத்துவருக்கு கத்திக்குத்து
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். அவர் வழக்கம் போல் மருத்துவமனைக்கு நேற்று புதன்கிழமை பணிக்கு சென்ற நிலையில், தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜியின் கழுத்து காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட 7 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜியை மீட்ட சக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல் நிலை சீராக உளளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இதனிடையே, தான் நிலையாக உள்ளதாகவும், தனது உடல் நிலையில் நன்றாக இருப்பதாகவும் மருத்துவர் பாலாஜி வீடியோவில் கூறினார்.
இதற்கிடையில், மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விக்னேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்
மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் மற்றொரு மருத்துவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஹரிஹரன் என்ற மனநல மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த பரத் என்கிற நோயாளி தாக்குதல் நடத்தியுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பரத் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று மருத்துவர் ஆலோசனையின் பேரில் மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளார்.
நேற்று சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனை வந்தபோது, மருத்துவர் ஹரிஹரனை முகத்தில் குத்தி சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி உள்ளார். இதில் காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் டேக் முறை
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வார்டில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நபருக்கு டேக் வழங்கப்பட்டு அதில் நோயாளியின் பெயர், பார்வையாளரின் பெயர், வார்டு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. டேக் உள்ளவர்கள் மட்டுமே தற்போது மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், 4 வண்ணங்களில் இந்த டேக்குகள் வழங்கப்படுகின்றன. அதில், சிவப்பு கலர் தீவிர சிகிச்சை பிரிவுக்கும், ஊத நிறம் பொது மருத்துவம் பிரிவுக்கும், மஞ்சள் நிறம் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுக்கும், பச்சை நிறம் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கும் என வழங்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“