ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவர் மருத்துவர் சுப்பையா சண்முகத்துக்கு எதிரான பாலியல் தொந்தரவு புகாரைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவர் மருத்துவர் சுப்பையா சண்முகம், செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்து செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட செவிலியர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷாவிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இந்த புகாரின்படி, கண்காணிப்பாளர் டாக்டர் ஆயிஷா, புற்றுநோய் துறை தலைவர் சுப்பையா சண்முகத்திடம் மருத்துவமனை விசாகா கமிட்டி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி மருத்துவமனை விசாகா கமிட்டி, புகார் அளித்த செவிலியர்கள் மற்றும் டாக்டர் சுப்பையா சண்முகத்திடம் 3 முறைக்கு மேல் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவர் மருத்துவர் சுப்பையா சண்முகதிற்கு எதிராக பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், மருத்துவர் சுப்பையா சண்முகம், காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மருத்துவர் சுப்பையா, தன்னை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மருத்துவர் சுப்பையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் யாரோ கேமரா வைத்து படம் பிடித்து உள்ளதாகவும், இது தொடர்பாக சுப்பையா காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்த வீடியோவில் இருப்பது மருத்துவர் சுப்பையா இல்லை என்றும் அவருக்கு எதிரான புகாரின் மீது விசாரணை நடத்திய விசாகா குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.
அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், மருத்துவர் சுப்பையாவுக்கு எதிராக இது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக வருவதாகவும், இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணைக் காட்டக்கூடாது என்று வலியுறுத்தினார்.
மேலும், பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகார் அடிப்படையிலேயே சுப்பையா பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மருத்துவமனை என்பது கிளப் அல்ல, அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் மருத்துவர் சுப்பையா, வீடியோவில் இது போல நடந்து கொண்டார் என்றும் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே, அவர் மீது இதுபோல புகார் உள்ளது என்று சுட்டிக் காட்டினார். அதோடு, உரிய விதிகளை பின்பற்றி சட்டத்துக்கு உட்பட்டுதான் மருத்துவர் சுப்பையா பணியிட மாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் மருத்துவர் சுப்பையாவின் மனுமீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“