கணவர் மீதுள்ள கோபத்தில் மாமனார் வீட்டுக்குப் பூட்டுப்போட்டு பூட்டுவது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், பெற்றோர் பராமரிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு நலச் சட்டத்தின் கீழ் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
உத்திரமேரூர் அருகே மாணம்பதி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் விநாயகம் (63). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி கடந்த 2012-ஆம் ஓய்வு பெற்றேன். எனது மனைவி ஆசிரியராக பணியாற்றி கடந்த 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். எனது ஊரில் பல ஆண்டுகளாக எனது சொந்த வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறேன். தற்போது தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றையும் நிர்வகித்து வருகிறேன்.
எனது மகன் நன்மதிமாறன் கடந்த 2015-ஆம் பொறியியல் படிப்பை நிறைவு செய்து 2016-ஆம் விஏஓ-வாக தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழலில் எனது மகனோடு படித்த மகேஸ்வரி என்ற பெண்ணை எனது மகன் கடந்த மே மாதம் 18-ம் தேதி அன்று பதிவுத் திருமணம் செய்தான். இந்நிலையில் எனது மகனுக்கும், அவனது மனைவி மகேஸ்வரிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்தனர். மகேஸ்வரியிடமிருந்து விவாகரத்து கோரி எனது மகன் தொடர்ந்த வழக்கு செய்யார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 5-ஆம் தேதி திடீரென எங்கள் வீட்டிற்கு 6 பேருடன் வந்த மகேஸ்வரி தகராறில் ஈடுபட்டார். இதனால் வீட்டைப் பூட்டிவிட்டு மறைமலை நகரில் உள்ள எனது மகள் வீட்டிற்கு நான், எனது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட மூவரும் சென்று விட்டோம். அதன் பிறகு எங்களது வீட்டுக்கு வந்த மகேஸ்வரி சைக்கிள் செயினைப் பயன்படுத்தி மற்றொரு பூட்டைப் போட்டு பூட்டிவிட்டுச் சென்றார். இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்களது சொந்த வீட்டிற்குள் செல்ல முடியாமல் வயதான காலத்தில் அவதியடைந்து வருகிறோம். ஆகவே எங்களது வீ்ட்டுக்கு மகேஸ்வரி போட்டுள்ள பூட்டை அகற்ற போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீஸார்க்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நடந்தது. மனுதாரர் தரப்பி்ல் வழக்கறிஞர் எஸ்.சிலம்பு செல்வன்ஆஜராகி, "மருமகள் போட்ட பூட்டால் கணவர் குடும்பத்தார் சொந்த வீட்டிற்குள்ளேயே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "கணவர் வீட்டார் மீது குடும்பத்தகராறு என்றால் மருமகள் சட்ட ரீதியாகத்தான் அதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதுபோல செயல்படக்கூடாது. கணவர் மீதுள்ள கோபத்தில் மாமனார் வீட்டுக்குப் பூட்டுப்போட்டு பூட்டுவது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது.
பெற்றோர் பராமரிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு நலச்சட்டத்தின் கீழ் மனுதாரரின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. இந்த வழக்கைப் பொருத்தமட்டில் மருமகளின் செயல்பாடு சட்ட விரோதமானது. எனவே மனுதாரரான ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தன்னுடைய சொந்த வீட்டுக்குள் செல்வதற்கும், மருமகள் போட்ட பூட்டை உடைப்பதற்கும் உத்திரமேரூர் போலீஸ் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகு மருமகள் தரப்பில் ஏதாவது புகார் தந்தால், அவர்கள் தரப்பிற்கும் வாய்ப்பளித்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.