தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பா.ஜ.க நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனுவை 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் 27-வது தலைமை மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி வினோத், செந்தில், விக்னேஷ் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் உதவியாளர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் அகோரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பு ஏப்ரல் 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அகோரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ.க நிர்வாகி அகோரம் ஜாமின் கோரி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பா.ஜ.க நிர்வாகி அகோரம் ஜாமின் கோரிய மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்னை கைது செய்துள்ளனர். அதனால், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று அகோரம் தரப்பில் கோரப்பட்டது.
இதற்கு, வழக்கில் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதால் ஜாமின் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம், தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பா.ஜ.க நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனுவை 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“