சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், வடபழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றபோது, சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் தவறான எண்ணில் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். இதை நீதிபதி சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியபோது, கோவில் ஊழியர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டு, அவரைத் தாக்கியதாக நீதிபதி எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், சென்னை வடபழனி தண்டாயுதபாணி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளது என திங்கள்கிழமை கடுமையாகக் கண்டனம் செய்தார்.
மாநில அரசு வழக்கறிஞர் பி. முத்துக்குமாருடன் நீதிமன்றத்தில் ஆஜரான கோயிலின் செயல் அலுவலரிடம், நீதிபதி தனது குடும்பத்துடன் சனிக்கிழமை கோயிலுக்குச் சென்றதாகக் கூறினார்.
“நீதிபதி என்ற எனது அடையாளத்தை வெளியிட்டு வி.ஐ.பி தரிசனம் செய்ய நான் விரும்பவில்லை. எனவே, நான் ஒரு சாதாரண மனிதனாக அங்கு சென்று ரூ.50 மூன்று சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வாங்கினேன்” என்று நீதிபதி கூறினார். சிறப்பு தரிசன டிக்கெட் தரும் கவுண்ட்டரை நிர்வகிக்கும் ஊழியர்கள் அவரிடம் இருந்து ரூ. 150 வாங்கிக்கொண்ட போதிலும், ஊழியர்கள் இரண்டு 50 ரூபாய்க்கான 2 டிக்கெட்டுகளையும், ஒரு 5 ரூபாய் டிக்கெட்டை மட்டுமே வழங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைப் பற்றி கேட்டதற்கு ஊழியர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டனர்.
இதுபோன்ற முறைகேடுகள் நடந்தால் பக்தர்கள் புகார் தெரிவிக்க அதிகாரிகளின் தொடர்பு எண்கள் கொண்ட அறிவிப்புப் பலகைகள் அங்கே ஏன் இல்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். சட்டவிரோதமான நடவடிக்கைட் தொடர்பாக புகார் அளிக்க, கோயில் செயல் அலுவலரின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ள கோவில் ஊழியர்கள் மறுத்துவிட்டதாகவும், அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டும் விதமாக அவர்கள் வாய் வார்த்தையாக சண்டையில் ஈடுபட்டதாகவும் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கூறினார்.
“முதலமைச்சரேகூட தனது தொடர்பு எண்ணை மக்களிடம் பகிர்ந்து கொள்ள தயங்காத போது, ஏன் கோயில் இ.ஓ.வின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று என் மனைவி கேட்டதற்கு, முதல்வர் பகிரலாம். ஆனால், அவர் பகிர மாட்டார்” என்று கோயில் ஊழியர் கூறினார் என்று நீதிபதி கூறினார்.
இந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பியதற்காக கோவில் ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தியதாகவும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அடையாளம் காட்டவில்லை என்றால், மற்றவர்களைப் போலவே அவரையும் கோவிலுக்கு வெளியே தள்ளியிருப்பார்கள் என்றும் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கூறினார்.
நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும், ஆண்டு வருமானம் ரூ. 14 கோடி கொண்ட ஒரு கோவிலின் நிலை இப்படி என்றால், மற்ற கோவில்களில் என்ன நடக்கும் என்பதை நினைத்தால் நடுங்குகிறது.
இவ்வளவு பெரிய கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை செயல் அதிகாரியாக நியமித்துள்ளதாக நீதிபதி கூறினார். இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்கான பொறிமுறையை ஏற்படுத்தத் தவறியதால், இந்த சோகமான நிலைக்கு நிர்வாக அதிகாரியும் சம அளவில் பொறுப்பு உள்ளது என்று அவர் கூறினார். எனவே, அவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மாநில அரசு வழக்கறிஞரிடம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் எழுதப்பட்ட புகாரை ஒப்படைத்தார். தேவைப்பட்டால், முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கோயில் ஊழியர்களை அடையாளம் காணவும் தயங்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும், நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கூறுகையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையரே இந்த பிரச்னையை பரிசீலித்து கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன், நான் தானாக முன்வந்து நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கிறேன் என்று கூறினார்.
ஜனவரி 2வது வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும் என்று நீதிபதியிடம் மாநில அரசு வழக்கறிஞர் உறுதியளித்தார்.
“அரசியலமைப்புச் சட்ட ஊழியர்கள் விஐபி-யாக இல்லாமல் பொது இடங்களுக்குச் செல்லும்போதுதான், சாமானியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அதிகாரிகளின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் நாம் பார்க்கிறோம்” என்று நீதிபதி கூறினார். மேலும், இதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
பல முதியோர்கள், குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் கோயில்களுக்கு வருவதால், கோயில் வளாகத்திற்கு வெளியே கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“