வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வியாழக்கிழமை (21.12.2023) காலை 10.30 மணிக்கு தண்டனை விவரங்களை அறிவிக்கிறது.
தற்போது தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக உள்ள க. பொன்முடி கடந்த 2006-11 தி.மு.க ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் 2011-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை முதலில் விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்ததது. பின்னர், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், கடந்த 27-ம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 19-ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி குற்றவாளிகள் என்று அறிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை வியாழக்கிழமை (21.12.2023) காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி, சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (21.12.2023) காலை தண்டனை விவரங்களை அறிவிக்கிறது.
ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், பொன்முடி அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“