தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரை மாவட்ட அளவிலான சிறப்பு நீதிமன்றங்கள் விடுவித்து தீர்ப்பு வழங்கின. அதேபோல, முன்னாள் அமைச்சர் பொன்முடியை, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புகளை எல்லாம் மறுஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து பொன்முடி தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.
இந்த நிலையில், 3 அமைச்சர்கள், 3 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகள் இன்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
மேலும், அரசியல்வாதிகளின் வழக்குகளால் பிற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்கு மேல் நடைபெறும் என்றும் சென்னை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“