திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும்போது இந்த ஆண்டு மட்டும் அங்குள்ள மலைக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பதில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார்த்திகை தீபம் ஏற்றும் போது மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கடந்த 7 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து திருவண்ணாமலையை சேர்ந்த சக்திவேல் மற்றும் சீனிவாசன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், தீபம் ஏற்றும் அன்று மலைக்கு மேல் செல்லும் பக்தர்கள், தேநீர் கப்புகள் போன்ற கழிவுப்பொருட்களை போடுகின்றனர். எனவே சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகின்றது. அதேபோல மகாதீபம் ஏற்றும் போது
மக்கள் லட்சக்கணக்கில் மலை ஏறுவதால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பு மற்றும் தேவையற்ற சம்பவங்களை தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடை விதிக்கப்பட்டதாக கூறினார். மேலும் அங்கு ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகள் குறித்த புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து மனுதாரர் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், "கார்த்திகை தீப கிரிவலத்துக்கு செல்வது என்பது மக்களின் நம்பிக்கை, அதை தடுக்க முடியாது. மேலும் மலைமேல் தீபம் ஏற்றுவது தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வாகும். கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது 40 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மலைக்கு மேல் செல்வது என்பது பல நூற்றாண்டுகளாக நடைபெறும் நிகழ்வு. கடந்த 9 ஆம் நூற்றாண்டு முதல் சில மத நம்பிக்கையுடன் மக்கள் சென்று வருகின்றனர். ஆனால் தற்போது சில காரணங்களை கூறி தீபம் ஏற்றப்படும் அன்று மலைக்கு செல்ல தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் திரளுகின்றனர் என்று கூறி தடை செய்தால் எந்த மத நிகழ்வுகளும் நடத்த முடியாது. மேலும் மத நிகழ்வுகளுக்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடும் இது போன்ற நிகழ்வுகள் இந்தியா முழுவதும் நடக்கின்றன.
குறிப்பாக கேரளத்தில் உள்ள சபரிமலையில் லட்சக்கணக்கில் ஏறும் போது, இங்கு போகக்கூடாதா ? என கேள்வி எழுப்பினார்.
மேலும் கோயில்களின் ஆகம விதிகளை அரசு கடைபிடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு இருப்பதால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற அரசு வாதம் ஏற்புடையது அல்ல, மாறாக உரிய வகையில் முறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்
இதனையடுத்து நீதிபதி, எத்தனை பேரை அனுமதிக்கலாம், லட்சக்கணக்கில் அனுப்பாவிட்டாலும், ஆயிரம் ஆயிரங்களாக அல்லது சிறு குழுக்களாக இந்த ஆண்டு அனுமதிக்க வாய்ப்பு உள்ளதா? என அரசு பரிசலிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், இது குறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரினார்.
இதனையடுத்து நீதிபதி, கார்த்திகை தீபம் ஏற்றப்படும் அன்று மலைக்கு பக்தர்களை மலை உச்சிக்கு செல்ல இந்த ஆண்டுக்கு அனுமதிக்க வாய்ப்புள்ளதா? என்பது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து திருவண்ணாமலை ஆட்சியர் பதில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.