தமிழ்நாட்டில் மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனவும் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக்கில் மது விற்பனையில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் என்பவர், டாஸ்மாக் மதுபானைக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்ட விலையைவிட கூடுதல் விலை கொடுக்கக் கூடது என்று எல்லா டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளின் முன்பும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்க வேண்டும் எனவும் மதுபானங்களை நாடு முழுவது இருக்கக் கூடிய நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து தமிழக அரசு ஏன் மறு பரிசீலனை செய்யக்கூடாது என்று கேட்டு தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை (ஜூலை 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை மாநில அரசின் கொள்கை முடிவு எனவும் இது தொடர்பாக உயர் நீதிமன்ற இரு நீபதிகள் அமர்வு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது அதே போல, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்க அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் மனுதாரர் அளித்துள்ள விண்ணப்பத்தைப் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதே சமயம், டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“