சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி பாக்கியை, சென்னை அடையார் கேட் ஹோட்டல், மே மாதத்திற்குள் 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அடையார் கேட் ஐந்து நட்சத்திர ஹோட்டல், கடந்த 2010-2011 ஆம் ஆண்டுக்கான 24 கோடியே 38 லட்சத்து 76 ஆயிரத்து 287 ரூபாய் சொத்து வரியை செலுத்தவில்லை என ஹோட்டல் நுழைவாயிலில் கடந்த 20 ஆம் தேதி மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. அத்துடன் அடையாறு கேட் ஹோட்டல் சொத்து வரி செலுத்தவில்லை என்று தண்டாரோ போட்டும் தெரிவித்தனர்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், சொத்துவரி தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரியும் அடையார் கேட் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 24 கோடி ரூபாய் பாக்கி தொகையில் 10 கோடி ரூபாயை எப்போது செலுத்த முடியும் என்று ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டு தெரிவிக்க அடையார் கேட் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி துரைச்சாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹோட்டல் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்னும் இரண்டு நாட்களில் 2 கோடி ரூபாய் செலுத்துவதாகவும் இந்த மாத இறுதிக்குள் 1 கோடி செலுத்துவதாகவும் மீதி தொகையை செலுத்த கால அவகாசம் தேவை என்றார்.
சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலுவையில் உள்ள வரியை தவணை முறையில் வரி வசூலிக்க அனுமதிக்க முடியாது. தற்போது இவர்களை அனுமதித்தால் மற்றவர்களும் இதே தவணை முறையில் வரி செலுத்தும் நிலை ஏற்படும் என்றார்.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையில் 10 கோடி ரூபாயை முன்று தவணைகளில் அடையார் கேட் ஹோட்டல் நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி, வரும் 30 ஆம் தேதிக்குள் மூன்று கோடி ரூபாயும், ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிக்குள் 3 கோடியே 50 லட்சம் ரூபாயும், மே மாதம் 30 ஆம் தேதிக்குள் 3 கோடியே 50 லட்சம் என மூன்று தவணைகளில் 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். மீதம் உள்ள 14 கோடி ரூபாய் செலுத்துவது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வரி தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிட்டு விசாரணை ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தார்.