விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பான விண்ணப்பங்களை பெறலாம் எனவும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்க கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த, 2007 ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக, கடந்த ஜூன் 22ம் தேதி தமிழக அரசு இரு அரசாணைகளை பிறப்பித்தது. இந்த அரசாணைகளை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் மேனன், ஏற்கனவே, 1999ல் வரன்முறைப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஒருமுறை மட்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தெரிவித்தது. இதை அமல்படுத்தாததால் ஏராளமான சட்டவிரோத, விதிமீறல் கட்டிடங்கள் முளைத்து விட்டன என வாதிட்டார்.
மேலும், 2007 க்கு பின் கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
விதிமீறல் கட்டிடங்களை தொடர்ச்சியாக வரன்முறை செய்தால், மக்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக விதிகளை மீறி கட்டிடங்களைக் கட்டுவதையே ஊக்குவிக்கும். அதனால், விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், இதுசம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்... விதிமீறல் கட்டிடங்களை அளந்து, அடையாளம் கண்டு வரன்முறைப்படுத்த உயர்மட்ட பன்னோக்கு சிறப்பு படையை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, மனுவுக்கு அக்டோபர் 3ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 23க்கு தள்ளி வைத்தனர்.
அதுவரை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்களை பெறலாம் எனவும், அதன் மீது நீதிமன்ற அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.