அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு!

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விசாரணை நடத்த உத்தரவு

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பால் வளத்துறைஅமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதே போல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார். இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கு அதிகமாகும். வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 23.5.2011 முதல் 20.4.2013 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி, ராஜேந்திரபாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும், விசாரணையை தொடர வேண்டியதில்லை, இது தொடர்பாக வழக்கை முடிக்கவும் பொது துறை உத்தரவிட்டதாக அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.

இதனையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக கொடுக்கப்பட்ட புகார் மனு மீது நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணை முறையாக இல்லை. அவர் அமைச்சரான பிறகு மட்டும் விசாரிக்க கூடாது. ராஜேந்திர பாலாஜி 1996 ஆம் ஆண்டு திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தது முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் அவர் 1996 ஆம் ஆண்டே பொது ஊழியராக இருந்துள்ளார். எனவே இந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணையை எஸ்.பி. அந்தஸ்து க்கு குறையாத ஐ.பி.எஸ் அதிகாரி கொண்டு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் தகவல்களை அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதன் அறிக்கையை சீலிட்ட கவரில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai hc orders to investigate minister rajendra balajis asset case

Next Story
ஜாக்டோ – ஜியோ போராட்டம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக மீண்டும் வெளிநடப்பு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express