"மணி" என்ற படத்தின் தலைப்பை போலி ஆவணங்கள் மூலமாக முறைக்கேடான முறையில் வேறு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றிய புகாரில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தாணு உள்ளிட்ட நிர்வாகிகள் மீது புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.ஆர்.சினி புரொடக்க்ஷன் நிறுவன பங்குதாரரான ஆர்.டி.ராகவன் என்ற துரைராஜன் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்களது நிறுவனத்தின் சார்பில் மணி (MONEY) என்ற தலைப்பில் படம் தயாரித்தோம். இந்த படத்தின் தலைப்பை ஏற்கெனவே தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் அன்னை தெரசா இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.கிஷோர்குமார் என்பவர் பதிவு செய்து வைத்திருந்தார். நாங்கள் அவரிடமிருந்து சங்க விதிகளைப் பின்பற்றி தடையில்லா சான்றிதழ் பெற்று மணி என்ற தலைப்பிற்கான காப்புரிமையைப் பெற்று படத்தை தயாரித்து தணிக்கை சான்றிதழும் பெற்றோம்.
இந்த படித்தில் கிஷோர்குமாரும் நிர்வாக உதவியாளராக பணிபுரிந்தார். பணம் கையாடல் காரணமாக அவரை நீக்கி விட்டோம். இந்நிலையில், 'மணி' படத்தின் படச்சுருள் அடங்கிய கம்ப்யூட்டர் டிஸ்க்கை கிஷோர்குமார் திருடிச்சென்றதாக விருகம்பாக்கம் காவல் துறையில் புகார் அளித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. சங்க விதிகளின்படி விளம்பர தணிக்கை சான்று பெறாமல் திரைப்படத்தின் விளம்பரங்களை வெளியிடக்கூடாது. ஆனால் இந்த மணி என்ற படத்தின் தலைப்பை அன்னை தெரசா இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் மீண்டும் மோசடியாக மறுபதிவு செய்து கொடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகிகளும் கிஷோருக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.
இதனால் எங்களது படத்தை குறிப்பிட்ட தேதியில் திரையிட முடியாமல் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு உடந்தையாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை உத்தரவிட வேண்டும்’’ இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை காவல் துறை வழக்கு பதிவு செய்யவில்லை எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, மனுதரார் புகார் தொடர்பாக சம்மந்தப்பட்ட போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் எனவும், விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரித்ததற்கான முகாந்திரம் இருந்தால் கலைப்புலி எஸ்.தாணு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னாள் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டார்.