மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க ஆறுமுசாமி ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆணையம் விசாரிக்க தடை விதித்தால், ஆணையம் அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைத்து விடும் எனவும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் அதன் வழக்கு விசாரணைக்கு தங்கள் மருத்துவமனை மருத்தவர்கள் ஆஜராக விளக்கு அளிக்க கோரியும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் மனுவில், 21 மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்னிலையில் கடந்த மாதம் 12 ஆம் தேதி (மார்ச்) இறுதி விசாரணைக்கு வந்த போது, அனைத்துத் தரப்பு வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆணையம் விசாரணையின் போது சாட்சிகளிடம் உண்மையை கொண்டு வர பல்வேறு கேள்விகளை எழுப்பும் இதை துன்புறுத்துவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறும் கருத்தை ஏற்று கொள்ள முடியாது.
ஆணையம் தன்னுடைய விசாரணையின் போது மருத்துவமனைக்கு எதிராக உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் ஆணைய தரப்பு வழக்கறிஞர் மனுக்களையும், பதில் மனுக்களையும் தாக்கல் செய்ததாக அப்போலோ தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகளை ஆணையம் தவிர்த்து இருக்கலாம்.
உண்மை கண்டறியும் குழுவான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய விசாரணையில் சதி, மோசடி என எந்த உள்நோக்கமும் யார் மீதும் கற்பிக்கக்கூடாது.
விசாரணை ஆணையம் தனது விசாரணை வரம்பை மீறி செயல்பட்டதாக அப்போலோ மருத்துவமனை கூறும் குற்றச்சாட்டு களில் வலு உள்ளது. ஆணையம் இதை தவிர்த்து இருக்க வேண்டும்.
அரசிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் முன் ஆணையம் மருத்துவ நிபுணத்துவம் பெறவில்லை அல்லது மருத்துவ கவனக்குறைவு என உள்நோக்கம் கற்பிப்பது தவறு.
தன் முன் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனை வழங்கிய சிகிச்சை குறித்து தனது கருத்தை மட்டுமே அரசுக்கு ஆணையம் தெரிவிக்க முடியுமே தவிர யாரையும் குற்றவாளி என்றோ அப்பாவி என்றோ தீர்மானிக்க முடியாது.
அரசின் விசாரணை வரம்புக்குட்பட்டு, விசாரணை ஆணையம் செயல்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
அரசுக்கு விசாரணை ஆணையம் எந்த முடிவை குறிப்பிட்டு இறுதி அறிக்கை அளித்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு தான். அப்படி நடவடிக்கை எடுக்கும் போது அப்போலோ நிர்வாகத்திற்கு, இயற்கை நீதியின் அடிப்படையில் உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரிக்க விசாரணை வரம்பை வகுத்துள்ளதால் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆணையம் விசாரிக்க, அதற்கு அதிகாரம் உள்ளது.
விசாரணை ஆணையத்திற்கு உதவியாக நிபுணர் குழுவை சேர்க்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது.
இதுவரை 5 எய்ம்ஸ் மருத்துவர்கள் 56 அப்போலோ மருத்துவர்கள் என 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது மருத்துவ நிபுணர்களை நியமிக்காதது குறித்து அப்போது அப்போலோ நிர்வாகம் கேள்வி எழுப்பவில்லை.
சிகிச்சை தொடர்பாக ஆணையத்திற்கு உதவ சென்னை மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் நந்தகுமார், மரகதம், நந்தகுமாரன், சிவராமன், மாலதி ஆகியோரை மருத்துவ கல்லூரி டீன் ஆணையத்திற்கு உதவியாக நியமித்துள்ளார். இந்த மருத்துவர்கள் குழு விரைவில் அறிக்கையை ஆணையத்திற்கு அளிக்க உள்ளனர்.
தற்போதய 90 சதவீத விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரிப்பதாக உத்தரவிட்ட நீதிபதிகள், ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்த மனுகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.