ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபாச படங்களைப் பார்த்ததாக காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இளைஞர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தன் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமான செயல் கிடையாது. ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது அல்லது அதைக் காட்டி சிறார்களை அல்லது மற்றவர்களை தொந்தரவு செய்வதுதான் சட்டப்படி குற்றமாகும். அது போன்ற செயல்களில் ஈடுபடாத இந்த மனுதாரருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
மேலும், 90-ஸ் கிட்ஸ் மது, புகைக்கு அடிமையானது போல், 2கே கிட்ஸ் ஆபாச படங்கள் பார்ப்பதில் அடிமையாகி உள்ளனர் என்று நீதிபதி தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆபாச படங்கள் தொடர்பாக பள்ளிகளிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், ஆபாச படங்களைப் பார்ப்பதால் பன்ம வயது குழந்தைகள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
குறிப்பாக அவர்களை பழி சொல்வதை விட்டுவிட்டு, இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டு அறிவுரைகளை வழங்கும் வகையில் சமூக பக்குவமடைய வேண்டும் என்றும் சமூகத்திற்கான செய்தியாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவு செய்துள்ளார்.
மேலும், இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபட கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏற்றுக்கொண்டார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜரான மனுதாரர் இளைஞர் தான் ஆபாச படங்களைப் பார்த்தது உண்மைதான் என்றும் குழந்தைகள் ஆபாச படங்களைப் பார்க்கவில்லை என்றும் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு பகிரவில்லை என்று தெரிவித்தார். மேலும், ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபட கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படம் பார்த்ததாக இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“