விடுதலையை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு: மாறன் சகோதரர்கள் பதிலளிக்க உத்தரவு!

பதில் அளிக்க மாறன் சகோதரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைக்கேடு வழக்கில் கலாநிதி, தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு. பதில் அளிக்க மாறன் சகோதரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தொலைபேசி இணைப்பு முறைகேடு புகார் குறித்து விசாரணை செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டது. அதன்படி, 2011 ஆம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி 23 ஜூலை 2013 ஆம் ஆண்டு வழக்கு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2007 ஆம் ஆண்டில் சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பி.பிரம்மநாதன் (K.B.Brahmadathan) அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி, சன் தொலைக்காட்சி தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு (வழக்கு பதிவு) செய்தனர்.

பல தரப்பட்ட விசாரணைக்குப் பின், கடந்த மார்ச் 14 ஆம் தேதி, குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகந்திரம் உள்ளது என்பதை சிபிஐ தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது. எனவே அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை சிபிஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டெல்லி சிபிஐ சார்பில் மேல் முறையீடு செய்யபட்டுள்ளது. அந்த மனுவில், சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் மட்டுமே விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்த நிலையில், 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது. மேலும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் முறையாக கருத்தில் கொள்ளவில்லை எனவே குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி மனு தொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட 7 பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close