ஹெல்மெட் அணிந்திருந்தால் இது நடந்திருக்காது: கர்ப்பிணி உஷா மரணம் குறித்து ஐகோர்ட்

பாதுகாப்புக்காகத் தானே ஹெல்மெட் போட சொல்கிறார்கள். உஷா மரணம் மிக துரதிர்ஷ்டவசமானது

வாகனங்களில் பயணம் மேற்கொள்வோர், தங்களின் பொறுப்பு உணர்ந்து செல்ல வேண்டும். இதிலிருந்து, நாம் தவறும்போதுதான் அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. சுய ஒழுக்கம் நம் அனைவருக்கும் வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்தார்.

பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டு, ஜன்னல், மேற்கூரை ஆகியவற்றில் தொங்கியபடி பயணிப்பது தொடர்பாக வந்த செய்திகளை வழக்கறிஞர் ஆர்.ஒய். ஜார்ஜ் வில்லியம்ஸ் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பெஞ்சில் முறையீடு செய்தார். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற முதல் டிவிசன் பெஞ்சானது, தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சென்னையில் பெண்கள் மற்றும் பள்ளி சிறுவர்களுக்கு என 250 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தடம் எண் 56 வழித்தடத்தில் மட்டும் 10 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாணவர்கள் மட்டும் பயணிக்கக்கூடிய வகையில் பள்ளிகளை இணைக்கும் வகையில் பள்ளி நேரங்களில் சிறப்பு வழித்தடங்களை உருவாக்க வேண்டும். நடுத்தர ஏழை மாணவர்கள் பயணிக்கும் வகையில் அந்த வழித்தடங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இயக்கப்படும் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்யாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் 56டி பேருந்தில் பயணம் செய்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்ததாக இன்று தினசரி செய்தித்தாள்களில் செய்தி வெளியானது. சம்பவம் தொடர்பாக வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு இன்று காலை ஆஜராகி முறையீடு செய்தார்.

56 வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கபட வேண்டுமென்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப் படவில்லை என்பதால், இந்த சம்பவம் நடந்ததாக அவர் புகார் தெரிவித்தார் .

அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து கூறுகையில், ஒவ்வொரு நாளும் துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெறுகின்றன. அவை ஒவ்வொன்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.
செய்தித்தாள்களில், திருச்சி திருவெறும்பூர் சம்பவம் தொடர்பாக, இருவேறு கருத்துக்கள் பதிவாகியுள்ளது.
திருவெறும்பூர் சம்பவத்தில் கூட, போலீஸ் நிறுத்தியபோது நிறுத்தவில்லை என செய்திகள் சொல்கின்றன.

நிறுத்தாததால் தான் போலீசார் அவர்களை விரட்டியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரின் பாதுகாப்புக்காதானே ஹெல்மெட் போட சொல்கிறார்கள். உஷா மரணம் மிக துரதிர்ஷ்டவசமானது. அவர், ஹெல்மெட் அணிந்து இருந்திருந்தால், இந்த துயரச் சம்பவம் தடுக்கப்பட்டு இருக்கலாம். இச்சம்பவத்துக்கு காரணமான ஆய்வாளர், கைது செய்யப்பட்டு உள்ளார். பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உஷாவின் குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.

நான் நீதிமன்றத்திற்கு இன்று மெரினா கடற்கரை சாலையில் நான் வந்து கொண்டிருக்கும் போது ராஜாஜி சாலை அருகே ஹெல்மெட் அணியாமல் பல பேர் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதை பார்த்தேன். அந்த இடத்தில் பல காவலர்கள் பணியில் இருந்தும், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமம். அனைவரும் கடைபிடிக்க வேண்டும். சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

பள்ளிமாணவர் உயிரிழந்தது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் வழக்காக எடுத்து விசாரிக்கப்படும். பேருந்து சம்பவத்திலும், நிறுத்தாத பேருந்தில் ஏற முயன்றபோதுதான் தவறி இறந்ததாக தெரிகிறது.

குடிமக்கள், பயணிகள் என்ற முறையில் நமக்கும் இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ளக்கூடாது என்ற பொறுப்புள்ளதை நாம் உணர்ந்து பயணிக்க வேண்டும். சுய ஒழுக்கம் என்பது நமக்கு வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close