குட்கா ஊழல் : சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோருக்கு இது நெருக்கடி!

madras_high_court verdict on gutkha case

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோருக்கு இது நெருக்கடி!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. ஜெ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி தமிழகத்தில் விற்பனை செய்ய அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் , மத்திய கலால் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர் என்றும் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு இதற்கான ஆதாரங்கள் குட்கா விற்பனையாளர் மாதாவ ராவ்-க்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் சிக்கிய குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு தொடக்கம் முதலே கூறிவந்தது. ஆனால் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதற்காக 55கோடி ரூபாய் வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால் அதுகுறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குட்கா கடன் உரிமையாளர் ரூ. 56 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்ததை விசாரணையில் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்போதைய டிஜிபி எழுதிய ரகசிய கடிதம் கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி வி.கே. சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றக்கூடாது எனத் தொடக்கம் முதலே தமிழக அரசு கடும் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசின் இந்த நடவடிக்கையே மேலும் இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்கத் தூண்டுவதாக தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கருத்து தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்த முறைகேட்டில் மற்ற மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதால் சிபிஐக்கு மாற்றுவதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை எனவும் கேள்வி எழுப்பி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை மூடுவிழா செய்வதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக அண்மையில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், குட்கா முறைகேடு புகார் வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி திமுக சார்பில் போடப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் மீது புகார் சுமத்தப்பட்டதால் அவர்களுக்கு நெருக்கடி அதிகமாகியிருக்கிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai hc to deliver verdict on gutkha case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express