நீதிமன்றத்தில் அளிக்கும் வாக்குறுதிகளை மீறி அதிகாரிகள் செயல்படுவதாகவும், வழக்கறிஞர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் மீறப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் மொத்தமாக எட்டுவழிச்சாலை திட்டத்துக்கே தடைவிதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
இதில் எட்டு வழிச்சாலை திட்டத்தில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் அதற்கான அளவிடும் பணி நடக்கிறது, பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்ற தகவலுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் கடந்த ஆகஸ்ட் 21 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும், பாமக தரப்பிலும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். நிலம் கையகப்படுத்தும் பணி நடத்தப்படமாட்டாது என தமிழக அரசும், மத்திய அரசும் உத்தரவாதம் கொடுத்தன.
ஆனால், உத்தரவாதத்தை மீறி அங்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுவதாகவும், பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், நிலம் அளவிடும் பணியில் இடையில் உள்ள மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்படுவதாகவும், நிலத்திலிருந்து பொதுமக்களை அச்சுறுத்தி அகற்றும் பணியை காவல்துறை மூலம் செய்து வருவதாகவும், நீதிமன்றத்தில் வாக்குறுதிகளை மீறி அரசுகள் செயல்படுத்தி வருவதால் நிலம் கையகப்படுத்தும் பணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கும், அளவிடும் பணிக்கும் தடை விதித்த நீதிபதிகள் மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பணிகளுக்கும் தடை தொடரும் என்று உத்தரவிட்டு வழக்கை செப்.11-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி அதிகாரிகள் செயல்படுவதாகவும், நில உரிமையாளர்களின் அனுமதி இல்லாமலே நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகவும், தனி நபர்களின் பட்டா நிலங்களின் பட்டாக்கள் உட்பிரிவு பட்டா செய்யப்பட்டு அது தொடர்பாக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்து அதை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.
அரசுத் தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைப் படித்த நீதிபதிகள் கோபமடைந்தனர். ஏற்கெனவே நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளை அரசு முறையாக செயல்படுத்தவில்லை எனவும், கடந்த முறையும், அதற்கு முன்னர் நடந்த விசாரணையிலும் நிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
நில உரிமையாளர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது, அவர்களை வெளியேற்றக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதையும் மீறி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் உறுதியளித்தபடி மீறி அதிகாரிகள் செயல்படுவதாக எச்சரித்த நீதிபதிகள் அவ்வாறு செயல்பட்டால் ஒட்டுமொத்த திட்டத்துக்கும் தடை விதிப்போம் என்று எச்சரித்தனர்.
நிலங்கள் தனிநபர் பட்டா நிலங்கள் அவருக்குத் தெரியாமல் எப்படி வகை மாற்றம் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒருவரது நிலத்தை கைப்பற்றும்போது அவர் அடையும் வேதனை மற்றவர்களுக்குத் தெரியும். அதை அதிகாரிகளால் உணர முடியுமா? என்று அதிகாரிகளைப் பார்த்து கேள்வி எழுப்பினர்.
ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இவ்வகையில் பட்டாக்களை வகைமாற்றம் செய்துள்ளது, உட்பிரிவுகள் மூலமாக நெடுஞ்சாலைத் துறைக்கு எடுக்க அரசு எப்படி உத்தரவிட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் எப்படி வெட்டுகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர்கள் சார்பில் "அதிகாரிகள் தரப்பில் அளவிட்ட இடங்களில் உள்ள மரங்களை நீங்களே வெட்டிக்கொண்டால் அதிக விலை கிடைக்கும். அரசு எடுத்த பின்னர் வெட்டினால் குறைந்த விலையே கிடைக்கும் என்று எங்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள்" என்று தெரிவித்தனர். அரசே தங்களை நிர்பந்தப்படுத்தி மரத்தை வெட்டச் சொல்வதாக மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வாதம் தொடர்ந்தது. தனியார் நிலத்தை அவர்களுக்குத் தெரியாமல் கையகப்படுத்துவது சரியாக இருக்காது. நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
எட்டு வழிச்சாலைக்கு எவ்வளவு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன?, எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன? முடிந்துள்ள அளவீடு பணிகள் என்ன? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் மதிப்பீடு முடிந்து அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு ஒத்திவைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.