Live

Chennai Rains : தொடர் மழை: சென்னையில் அரசு அலுவலகங்கள் நவ. 8ம் தேதி விடுமுறை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி, குடியிருப்புகள் தீவுகள் போல் காட்சியளிக்கின்றன.

வங்கக் கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் விடாத மழை

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. அதிகாலை மழை தொடர்வதால், சாலைகளில் மழைநீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து செல்கின்றன.

சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை

சென்னை மட்டுமின்றி மேலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை ஆகிய பகுதிகளிலும் இரவு முதல் கனமழை பெய்தது. அதே போல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏரிகளில் உபரி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பகல் 1.30 மணிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்படவுள்ளது. அதே போல, புழல் ஏரியில் காலை 11 மணிக்கு உபரிநீர் திறக்கப்பட உள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

26 மாவட்டங்களில் மழை நீடிக்கும்

சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
9:30 (IST) 7 Nov 2021
தொடர் மழை: சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னையில் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

9:28 (IST) 7 Nov 2021
தமிழகத்தின் கன மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிதமர் மோடி

முதலமைச்சர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் கனமழை பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

9:11 (IST) 7 Nov 2021
சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் கனமழை

சென்னை சுற்றுவட்டாரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது

8:59 (IST) 7 Nov 2021
அதிமுக ஆட்சியில் நடந்த மழைநீர் வடிகால் பணிகளின் லட்சணம் இதுதான் – அறப்போர் இயக்கம் விமர்சனம்

முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை பொறியாளர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகளின் லட்சணம்தான் இது. வரிப்பணத்தை கொள்ளையடித்து சென்னை மக்களை துயரத்தில் ஆழ்த்தும் இவர்களுக்கு தண்டனை கிடைப்பது எப்போது என்று அறப்போர் இயக்கம் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

8:55 (IST) 7 Nov 2021
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சசிகலா அறிக்கை!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு சசிகலா அறிக்கை விடுத்துள்ளார்.

6:58 (IST) 7 Nov 2021
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று தாமதமாக புறப்படும் ரயில்கள்

ஆழப்புழா ரயில் தாமதமாக இரவு 12.30க்கு புறப்படும்; மேட்டுப்பாளையம் ரயில் இரவு 10.15 மணிக்கு புறப்படும்

டெல்லி ரயில் மாலை 6.50க்கு பதிலாக தாமதமாக இரவு 9.30 மணிக்கு புறப்படும்.

6:01 (IST) 7 Nov 2021
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் வாகன நெரிசல்; கட்டணமின்றி செல்ல அனுமதி

தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். மதுராந்தகம் சுங்கச்சாவடியில் கடும் வாகன நெரிசலால், கட்டணம் இன்றி இலவசமாக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

5:59 (IST) 7 Nov 2021
சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

5:53 (IST) 7 Nov 2021
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு 2,000 கனஅடியாக உயர்வு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு 1,000 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4:48 (IST) 7 Nov 2021
சென்னை மழை – ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரிப்பன் மாளிகையில் இன்று மாலை நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.ஏஎஸ் அதிகாரிகள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

4:44 (IST) 7 Nov 2021
பொதுமக்கள் சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள 24 மணி நேரம் இயங்கும் உதவி மையம் அமைப்பு

பொதுமக்கள் சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள 24 மணி நேரம் இயங்கும் உதவி மையம் அமைக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை: உதவி எண்கள்: 044-29510400, 9444340496

24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்கள்: 8754448477

ஆம்புலன்ஸ் / சுகாதார ஆலோசனை உதவிக்கு… : 108 / 104

4:40 (IST) 7 Nov 2021
ஓட்டேரி அருகே கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணியில் ஈடுபடும் தீயணைப்புத்துறை

சென்னை ஓட்டேரி அருகே கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புத்துறை தேடிவருகின்றனர்.

தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து, வலிப்பு ஏற்பட்டு ஏழுமலை (40) என்பவர் கால்வாயில் விழுந்துள்ளார்.

4:05 (IST) 7 Nov 2021
சென்னையிலிருந்து புறப்படும் தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை

சென்னையிலிருந்து புறப்படும் தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை என்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலையில் புறப்படும் ரயில்கள் சற்று தாமதமாக புறப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

2:55 (IST) 7 Nov 2021
வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் 2 நாட்கள் கழித்து பயணம் செய்ய முதல்வர் அறிவுறுத்தல்

தொடர் மழை காரணமாக, வெளியூரில் இருந்து சென்னையை நோக்கி வருபவர்கள் 2 நாட்கள் கழித்து பயணம் மேற்கொள்ளவும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

2:22 (IST) 7 Nov 2021
சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய முதல்வர்

சென்னை கொளத்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவு வழங்கினார்

2:06 (IST) 7 Nov 2021
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

1:43 (IST) 7 Nov 2021
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதற்கட்டமாக 500 கனஅடி உபரிநீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதற்கட்டமாக 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,590 கனஅடியாக உள்ளது

1:34 (IST) 7 Nov 2021
சென்னையில் மக்கள் தங்க பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு

சென்னையில் கனமழை காரணமாக பொதுமக்களை தங்க வைக்க பள்ளிகளை திறந்து வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது

1:19 (IST) 7 Nov 2021
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1000 கனஅடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரிப்பு

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1000 கனஅடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

12:56 (IST) 7 Nov 2021
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் டிஜிபி அலுவலக பகுதியில் 23 செ.மீ மழை பதிவு

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் டிஜிபி அலுவலக பகுதியில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது

12:31 (IST) 7 Nov 2021
2015ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னையில் ஒரேநாளில் 23 செ.மீ. மழைப்பதிவு

கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னையில் ஒரேநாளில் 23 செ.மீ. மழைப்பதிவு பதிவாகியுள்ளது

11:35 (IST) 7 Nov 2021
மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை உடனே நிறைவேற்றுக – திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை உடனே நிறைவேற்றுக என திமுகவை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

11:19 (IST) 7 Nov 2021
மு.க.ஸ்டாலின் மழை நீரில் இறங்கி ஆய்வு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு , தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

11:15 (IST) 7 Nov 2021
புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு

சென்னை புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது 21.2 அடி கொண்ட ஏரியில் தற்போது 19.3 அடி தண்ணீர் உள்ளது

10:55 (IST) 7 Nov 2021
தொடர் மழை: 3 மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை

தொடர் மழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா 1 குழுவும், மதுரைக்கு 2 குழுக்கள் என மொத்தம் 100 வீரர்கள் சென்றுள்ளனர்.

10:26 (IST) 7 Nov 2021
வடசென்னை மழை பாதிப்பு: ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை பகுதியில் மழையாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களை இன்று காலை 11 மணியளவில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:13 (IST) 7 Nov 2021
தொடர் மழை – சூளைமேடு பகுதியில் மின்சாரம் துண்டிப்பு

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது சூளைமேடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

10:11 (IST) 7 Nov 2021
பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் விநாடிக்கு 2,894 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10:09 (IST) 7 Nov 2021
சென்னையில் 12 மணி நேரத்தில் 20 செ.மீ மழை – அமைச்சர் மா.சு தகவல்

சென்னையில் 12 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்துள்ளது.மழை நின்றால் மட்டுமே நீரை வெளியேற்றும் பணியை விரைவாக மேற்கொள்ள முடியும், அதற்கான பணியில் மாநகராட்சி தயாராக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

9:58 (IST) 7 Nov 2021
507 இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றம்

சென்னையில் 507 இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

9:31 (IST) 7 Nov 2021
சென்னைக்கு ரெட் அலர்ட்

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

9:29 (IST) 7 Nov 2021
வடசென்னை, வில்லிவாக்கம் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிப்பு

வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.

9:15 (IST) 7 Nov 2021
தி.நகர் துரைசாமி சுரங்கப்பாகை மூடல்

சென்னை தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

9:03 (IST) 7 Nov 2021
சென்னை மழை – உதவி எண்கள் வெளியீடு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

1913

04425619206

04425619207

04425619208

9445477205 எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாக புகார்களை தெரிவிக்கலாம்.

8:46 (IST) 7 Nov 2021
புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு

தொடர் மழை காரணமாக காலை 11 மணிக்கு புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது; சாமியார்மடம், வடகரை, வடபெரும்பாக்கம், மணலி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8:43 (IST) 7 Nov 2021
அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

Web Title: Chennai heavy rain flood live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com