சிமெண்ட் விலையை குறைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு அளித்த கோரிக்கை மனு குறித்து பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொருளாளர் அம்மாசியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தங்கள் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் சிமெண்ட் தற்போது ஒரு மூட்டை 385 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது என்றும், ஆனால் 5 மாதத்திற்கு முன்பு 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சிமெண்ட் தயாரிப்பாளர்கள் எந்த வித காரணமும் இல்லாமல் சிண்டிகேட் அமைத்து விலையை உயர்த்துவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இது போன்ற விலை ஏற்றத்தால் தங்களது ஒப்பந்த பணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஒப்பந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 3 லட்சம் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவில் 320 ரூபாய்க்கும், கர்நாடகா வில் 335 ரூபாய்க்கும் சிமெண்ட் விற்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக விலைக்கு சிமெண்ட் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல முறை மனு கொடுத்தும் சிமெண்ட் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சிமெண்ட் விலையை குறைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு மனுதாரர் அளித்த கோரிக்கை மனு குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.