விதிமீறல் கட்டிடங்களை தடுக்காத சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை ஏன் கலைக்கக் கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் ஆக்கிரமித்து விதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்று கொண்டு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதா? ஆக்கிரமிப்பு மற்றும் விதிமீறல் தடுக்காத சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை ஏன் கலைக்க உத்தரவிட கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினர்.
சென்னையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், விதிமீறல்கள் தொடர்வதாகவும் சிஎம்டிஏ அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவில்லை எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகும் கூட மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ பாடம் கற்கவில்லையா? சென்னையில் நேற்று பெய்த மழையால் சாலையில் தேங்கிய நீரை கூட மாநகராட்சியால் விரைந்து அகற்ற முடியவில்லை என தெரிவித்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சியை பெருநகர மாநகராட்சி மாற்றியுள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சியிலும், விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சிஎம்டிஏ வில் போதுமான பணியாளர்கள் உள்ளனரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், சி.எம்.டி.ஏ மற்றும் மாநகராட்சியில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜூலை 16 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.