சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் எதிராக காவல்துறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளிப்பது தொடர்பாக எந்த ஒரு ஆவண ஆதாரங்கள் இல்லாமல் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு இன்று சில வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அந்த வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேல் எதிராக காவல்துறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தது குறித்து, நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், வெறும் வாய் மொழி வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட முடியாதென்றும் முறையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டனர். ஆதாரங்களை தாக்கல் செய்யும் பட்சத்தில் அதை நீதிமன்றம் ஆய்வு செய்யும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இது சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறியதற்கு, அதற்கு உங்களுக்கு என்ன அடிப்படை உரிமை இருக்கிறது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது அரசு துறையில் அதிகாரிகள் அளவில் நடைபெறும் ஒரு விவகாரம். இதில் மற்றவர்கள் அல்லது மூன்றாம் நபரை எப்படி தலையிட முடியும்? என யானை ராஜேந்திரனிடம் கேள்வி எழுப்பினார்.
பின்னர் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.