நீதிபதி எம்.சுந்தருக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் - ஐகோர்ட்

எம்.சுந்தருக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்

நீதிபதி எம்.சுந்தருக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரி என்று தலைமை நீதிபதியும், தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், நீதிபதி எம்.சுந்தர் வீட்டிற்கு மர்ம கடிதம் கடந்த வாரம் வந்துள்ளது. அதில், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விவரங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை காவல் ஆணையரிடம் ஏ.கே.விஷ்வநாதனை தொடர்புக் கொண்டாதாக தெரிகின்றது.

இதனையடுத்து நீதிபதி எம்.சுந்தர் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி நீதிபதி எம்.சுந்தர் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் வழக்குகளை விசாரித்து வந்த போது வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு தலைமை நீதிபதி, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை சட்டப்படி காவல்துறை எடுக்கும். அந்த வேலைகளை எல்லாம் காவல்துறையினர் பார்த்துக் கொள்ளும் என்று கருத்து தெரிவித்தார்.

×Close
×Close