மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நூங்கம்பாக்கத்தைச் சேர்ந்த எல்.கே.வெங்கட் தாக்கல் செய்துள்ள மனுவில் கல்வி வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டம் முழுவதுமாக அமல்படுத்தப்படுவதில்லை. மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வியில் இந்த இட ஒதுக்கீடு தரப்படுவதில்லை.
பெரும்பாலும் மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்வதும் மாற்றுத் திறனாளிகளைத்தான். இதனால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கு மற்றவர்களின் துணை தேவையாக உள்ளது. இந்த அளவுக்கு சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
எனவே, மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மத்திய மனித வள மேம்பாடு துறை செயலாளருக்கு கடந்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி மனு அனுப்பினேன். எனது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலிக்குமாறு மனித வள மேம்பாடு துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு 3 வாரங்களில் பதில் தருமாறு மத்திய மனிதவள மேம்பாடு துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.