தமிழக ஜோதிடர்களை போல மேலை நாட்டவர்களால் வாணவியல் நிகழ்வுகளை கணிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால் தற்போது தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் யாகம் நடத்த கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பபட்டது.
இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும், மழை வேண்டி கோயில்களில் நடைபெற்று வரும் யாகத்திற்கு தடை விதிக்க கோரியும் சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்பழகன் உயர்நீமதின்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசே பணம் ஒதுக்குவது சட்ட விரோதமானது எனவும் அரசாங்கமே இது போன்ற செயல்களில் ஈடுப்படக்கூடாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருஞானசம்பந்தரின் பஞ்சாங்க நூலில் மழை வேண்டி யாகம் நடத்தலாம் என குறிப்பிடப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது.
இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், தமிழக ஜோதிடர்களை போல் அடுத்த 5 மாதங்களில் ஏற்படும் கிரகணம் போன்ற வாணவியல் நிகழ்வுகளை மேற்கத்திய ஜோதிடர்களால் கணிக்க முடியுமா என கேள்வி எழுப்பினர். மேலும், இது போன்ற யாகம் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுவதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.