சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்து, செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்தக் குழு, 3 பேரைத் தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, செப்டம்பர் 13, 2023 அன்று 3 பேர் கொண்ட தேடல் குழுவை அமைத்து உயர்கல்வித் துறை பிறப்பித்த அரசாணையை (G.O.) ரத்து செய்யுமாறும், பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைந்த உறுப்பினரை குழுவில் சேர்க்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறும் உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தி, வழக்கறிஞர் பி. ஜெகநாத் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், பல்கலைகழகத்தின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் வகையிலான சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளதை அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். மேலும், எந்தெந்த திட்டங்களுக்கு யு.ஜி.சி நிதி உதவி பெறப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
துணை வேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி பிரதிநிதியை சேர்ப்பது பற்றிய இந்த வழக்கில், வேந்தர் பதவி குறித்து தாங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“