பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை தி.நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு 26 கோடி ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதால் அந்த முடிவை ரத்து செய்யக்கோரி தி.தகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை 2017ம் ஆண்டு ஜூன் மாதம் விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, கட்டிடப்பணிகளை மேற்கொள்ள தடைவிதித்து இருந்தது. பின்னர் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என தெரிவித்ததால், கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ஸ்ரீரங்கன் ஆஜராகி, அப்பகுதி வீட்டு மனைப்பிரிவு தொடர்பாக அரசு தாக்கல் செய்த ஆவணங்களில் லேஅவுட்டிற்கு இடையே உள்ள சாலை அரசுக்கு சொந்தமானது என்றும், அதுகுறித்த விவரங்களை மறைத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முறையிட்டார். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் ஆட்சேபனை இல்லை எனவும், ஆனால் சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் மீட்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.அவரது வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.