தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனக்கு எதிராக் தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அண்மையில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், ஸ்டாலினுக்கு எதிரான மற்ற வழக்குகளும் இன்று (டிசம்பர் 14) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஸ்டாலின் பொது மேடைகளில் தமிழக முதல்வர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் குறித்து நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் குறித்து பேசிய கருத்துகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதல்வர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.
மேலும், அரசியல் ஆதாயத்திற்காக மு.க.ஸ்டாலின் உட்பட மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இது போன்ற தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்றும் நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தினார்.
அதோடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டும். அதை விடுத்து, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்ற கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்வது பொதுமக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும் என்று அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். மேலும், அவதூறு வழக்குகளை ரத்து செய்து வரும் நீதிமன்ற உத்தரவுகளை தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ள கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து, நீதிபதி சதீஷ் குமார், தமிழகத்தில் அரோக்கியமான அரசியலை உருவாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிபதி மற்ற வழக்குகளின் விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.