ப்ளேகேம்ஸ் (PlayGames24x7) தளத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடியதால் ஏற்பட்ட நிதி நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்ட இருவரின் மரணம் தொடர்பாக கேமிங் தளமான ப்ளேகேம்ஸ் மீது எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சி.பி.சி.ஐ.டி (CB-CID) காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி பிறப்பித்த நோட்டீஸ்களை எதிர்த்து நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி ஜி சந்திரசேகரன் செவ்வாய்கிழமை காவல்துறைக்கு வாய்மொழி அறிவுறுத்தலை வழங்கினார்.
இதையும் படியுங்கள்: ரேபிடோ ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவர் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல்; போலீஸ் கமிஷனரிடம் புகார்
மனுதாரரான ப்ளேகேம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ஆன்லைன் கேம் விளையாடியதாகக் கூறப்படும் ஜனவரி 2, 2022 அன்று தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் என்பவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தவது தொடர்பாக குற்றப் பிரிவு காவல்துறையிலிருந்து கடந்த ஆண்டு நோட்டீஸ் வந்தது.
இதேபோல், பிப்ரவரி 24-ம் தேதி, மணிகண்டனின் மரணத்திற்கு ஐ.பி.சி 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து குற்றப்பிரிவு மற்றொரு நோட்டீஸ் அனுப்பியது. ப்ளேகேம்ஸ் நிறுவனத்தின் அதிகாரியை நேரில் ஆஜராகுமாறு கூறியதுடன், எங்களிடமிருந்து பல ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களைக் குற்றப்பிரிவு கோரியது.
தற்கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்துகிறோம் என்ற போர்வையில் குற்றப்பிரிவு போலீசார் எங்களது ஊழியர்களை துன்புறுத்துகின்றனர். நிறுவனத்தின் மீது கொலைக் குற்றம் சாட்டுவதும், பொருத்தமற்ற தகவல்களைக் கோருவதும் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் ஆகும், மேலும் ஆன்லைன் ரம்மிக்கு முழுத் தடை விதிப்பதன் மூலம் அரசு நேரடியாக அடையத் தவறியதை மறைமுகமாகச் சாதிக்கும் முயற்சியாகும்.
எனவே, மணிகண்டனின் தற்கொலைக்கு எங்கள் நிறுவனம் காரணமில்லை என்று கூறி, அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றும், நிறுவனத்தையும் அதன் ஊழியர்களையும் துன்புறுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் ப்ளேகேம்ஸ் நிறுவனம் மனுவில் கோரியது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதனையடுத்து அதுவரை நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுதாரரான ப்ளேகேம்ஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைக்கு நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்று சி.பி.சி.ஐ.டி.,யின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததால், நீதிமன்றம் வாய்வழி அறிவுறுத்தலை வழங்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.