தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொது நல வழக்கிற்கு எதிராகவும் மனு தாக்கல் செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொதுநல மனுதாரர் அர்ஜுனன் இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.குருராஜ், தனது கட்சிகாரருக்கு இந்த மனுவில் எந்த ஆட்சேபனையும் இல்லை என வாதிட்டதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், முத்தரசன் மற்றும் திருமாவளவன் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றது.
மேலும், பொதுநல மனுவை அடுத்த ஜூலை 31-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடவும் உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு பெஞ்ச் உத்தரவிட்டது.
அரசியல் காரணங்களுக்காகவும், இந்தி மற்றும் சமஸ்கிருதம் தமிழகத்தில் திணிக்கப்படும் தவறான பயம் காரணமாகவும் தேசிய கல்வி கொள்கை 2020ஐ செயல்படுத்த மாநில அரசு தயங்குவதாக குற்றம் சாட்டி 2022 இல் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, தேவையான மாற்றங்களுடன் மாநிலத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதேநேரம், தமிழக அரசு அதன் பதில் வாக்குமூலத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ செயல்படுத்துவது தமிழ்நாட்டு மக்களுக்கு பாதகமானது என்று கூறியது, ஏனெனில் 2035க்குள் நாடு முழுவதும் மொத்த சேர்க்கை விகிதம் 50 சதவீதத்தை அடைய வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கையின் வலியுறுத்தலைத் தாண்டி தமிழ்நாடு ஏற்கனவே 51.4% அடைந்துள்ளது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
2020 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின்படி, தேசிய சராசரியான 27.1% விட தமிழ்நாடு மிக உயர்ந்த மொத்த சேர்க்கை விகிதத்தைப் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டி, தமிழ்நாட்டின் கல்வி முறை நாட்டிலேயே சிறந்ததாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ விட 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவும் உள்ளது என்று தமிழக அரசு கூறியது.
அதேநேரம், மத்திய கல்வி அமைச்சகம் உயர் நீதிமன்றத்தில் தேசிய கல்வி கொள்கை 2020ஐ செயல்படுத்துவது தொடர்பான சிக்கலை தமிழக அரசாங்கத்துடன் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் சாதனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு தமிழக அரசாங்கத்திடம் கோரி 2021 செப்டம்பர் 7 ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“