சட்டபேரவை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அமைப்புகளில் கூட சாதியே ஆதிக்கம் இன்னும் செலுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளும் சாதியை ஊக்குவிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆணவ கொலைகள் தொடர்பாக பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.
அப்போது, ஆணவ கொலைகளை தடுப்பது மற்றும் தீர்வு காண உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எந்த மாவட்டத்தில் அதிகளவிலான ஆணவ கொலைகள் நடைபெறுகிறது என அடையாளம் காணும் படி அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
2018-ம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன எனவும் ஆணவ கொலைகளை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை இல்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆணவ கொலைகளுக்கு காவல் துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக மூத்த வழக்குரைஞர் வைகை குற்றம்சாட்டினார்..
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 81 ஆணவ கொலைகள் நடந்துள்ளது. அரசு முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற கொலைகள் நடந்திருக்காது. ஆனால், இதில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
தங்களது சாதியை வெளிப்படுத்தி கொள்ள பள்ளி குழந்தைகள் கைகளில் அடையாள கயிறுகள் கட்டுவதாகவும், இப்போதும் கூட ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், சட்டபேரவை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் கூட சாதியே ஆதிக்கம் செலுத்துவதாகவும், சாதியை அரசியல் கட்சிகள் ஊக்குவிப்பதாகவும் நீதிபதிகள் சாடினர்.
சட்ட ஆணையம் பரிந்துரை அடிப்படையில் ஆணவ கொலை தடுப்பு வரைவு மசோதாவின் நிலை என்ன என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதிகரித்து வரும் ஆணவ கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கை குறித்து ஜூலை 22-ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து பதிலளிக்க அரசு தரப்பில் 8 வாரம் கால அவகாசம் கேட்க்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் முக்கியமான விவகாரங்களில் அரசு இதுப்போன்ற நீண்ட நாள் கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் இந்த விவகாரத்தை தீவிரமாக அனுகுகிறதும் என்றும் தெரிவித்தனர்.