பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் - சென்னை உயர் நீதிமன்றம்

பேனர்களை அகற்றாததற்கான காரணங்களை கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - நீதிபதிகள் வேதனை

அரசியல் கட்சி பேனர்கள் : அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து பணியற்றலாமே என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது.

விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்றும், தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் விசாரித்து வருகின்றனர்.

அரசியல் கட்சி பேனர்கள் – விதிமுறை மீறல்

இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை முழுவதும் பேனர்கள் வைத்தவர்கள் மீது, வடபழனியில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்காக பேனர் வைக்கப்பட்டது அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூடுதல் மனுக்களை டிராபிக் ராமசாமி தாக்கல் செய்தார்.

அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் விதிமீறல் பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பாக யார் மீதும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பெரும்பாலான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. அதேசமயம் சில இடங்களில் பேனர் வைத்தவர்களே தானாக முன்வந்து அகற்றி விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சி பேனர்கள் காரணங்களை கேட்டு சோர்வடைந்த நீதிபதிகள்

அரசின் அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், விதிமீறல் பேனர்களை தடுக்க வேண்டும் என்று பல உத்தரவுகளை போட்டாலும், அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என குற்றம்சாட்டினர். விதிமீறல் பேனர்களை முறையாக அகற்றாதது தொடர்பாக கடந்த 5 வருடங்களாக அரசு தெரிவிக்கும் காரணங்களைக் கேட்டு சோர்வடைந்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒரு பொருளை திருடியவர் பொருளை திருப்பிக் கொடுத்து விட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டீர்களா? என கேள்வி எழுப்பியதுடன், அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து கொள்ளலாமே என கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும், பேனர் வைக்கும் அரசியல் கட்சியினரும் மீதுதான் மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாலும், ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், யார் பிரிண்ட் செய்கிறார்கள் என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

விதிமீறல் டிஜிட்டல் பேனர்களை அகற்றினால் அவற்றை சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்ற வேண்டும். அதற்கும் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க : சட்டத்திற்கு புறம்பாக கொடிக்கம்பம் வைத்த வழக்கில் நேரில் ஆஜரானார் சேலம் ஆட்சியர் ரோஹினி

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close