“இந்தி கற்றுக்கொள்வதால் என்ன தீமை ஏற்படும்? பலர் இந்தி தெரியாமல் மத்திய அரசு வேலை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு திங்கள்கிழமை கூறியுள்ளது.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்தக் கோரி கடலூரைச் சேர்ந்த அர்ஜூனன் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
மனுதாரரின் கருத்துப்படி, ஒருவர் தாய்மொழியை மட்டும் கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்காது. இந்த மொழி மற்ற இந்திய மொழிகளுடன், குறிப்பாக இந்தி மற்றும் சமஸ்கிருதத்துடன் கைகோர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் “இந்தி கற்றுக்கொள்வது என்ன தீமை ஏற்படும்? பலர் இந்தி தெரியாமல் மத்திய அரசு வேலை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்” கருத்து தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சுண்முகசுந்தரம், “தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறது. மூன்று மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கவில்லை. ஏனெனில், அது மாணவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும்” என்று கூறினார். மேலும் அவர், “தமிழகத்தில் இந்தி கற்பதை யாரும் தடுக்கவில்லை. இந்தி பிரச்சார சபை போன்ற நிறுவனங்கள் மூலம் இந்தி மொழியைக் கற்கலாம்” என்று கூறினார்.
சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, “கற்றல் என்பது கற்பித்தலில் இருந்து வேறுபட்டது” என்று கூறியுள்ளனர்.
கடலூரைச் சேர்ந்த அர்ஜூனன் இளையராஜா தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"