Advertisment

மத்திய அரசு வளாகத்திற்கு சதுப்பு நிலம் ஒதுக்கீடு : அரசு உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

மழை காலத்தில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் சென்னை நகரமும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களும் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கிறது என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Chennai High Court Wetlands

சதுப்பு நிலங்களை பாதுகாக்க உத்தரவு

இந்திய புள்ளியல்துறையின் கட்டிடத்திற்காக காரப்பாக்கம் பகுதியில் உள்ள சதுப்புநிலங்களை ஒதுக்கிய வருவாய் துறை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் நிலத்தை மீட்டு பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல, சமீபத்தில் சென்னையை உலுக்கிய வெள்ள பாதிப்பை சுட்டிக்காட்டி அறிவுரையும் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் இந்திய புள்ளியல்துறையின் புதிய கட்டிடத்திற்காக சென்னை காரப்பாக்கம் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் 38 ஏக்கர் நிலப்பரப்பை சதுப்புநிலங்கள் என்று வகைப்படுத்திய வருவாய்த்துறை, அதில் 8 ஏக்கர் பரப்பளவை இந்திய புள்ளியல்துறைக்கு ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருந்தது, கடந்த 2014-ம் ஆண்டு மே 16-ந் தேதி ஒதுக்கப்பட்ட இந்த அரசாணையை எதிர்த்து, ஈச்சம்பாக்கத்தை சேர்ந்த இயற்கை அறக்கட்டனையின் நிறுவனர் ஐ.ஹெச்.சேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், பக்கிங்காம் கால்வாயில் இருந்து துரைப்பாக்கம் - ஒக்கியம் கால்வாய் வழியாக, வரும் உபரி நீரை சேகரிக்க பயன்படும் சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசே அந்த நிலத்தை இந்திய புள்ளியல்துறைக்கு ஒதுக்கியுள்ளது. அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து சதுப்பு நிலங்களை பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் முடிவில், சோழிங்கநல்லூர் தாலுகாவில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 3.23.80 ஹெக்டேர் நிலத்தை இந்திய புள்ளியல்துறை வளாகம் கட்டுவதற்காக மாற்றி 2014 மே 16 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை (ஜி.ஓ.) ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், 5 கோடி ரூபாய் செலவில், குப்பைகளை நிரப்பியதாகவும், 8 கோடி ரூபாய் செலவில், சுற்றுச்சுவர் கட்டியதாகவும், அரசு தரப்பில் கூறியிருந்த நிலையில், தாழ்வான நிலத்தை, பழைய நிலைக்கு மீட்டெடுக்க, மாநில அரசு அதிகாரிகளுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வளாகம் கட்டுவதற்காக, அந்த இடத்தின் உயரத்தை உயர்த்த பயன்படுத்தப்பட்ட அனைத்து குப்பைகளையும் அகற்ற வேண்டும். அதன்பின், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து உபரி நீரை வெளியேற்றி, சேமித்து, பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றக்கூடிய ஒரு அமைப்பாக செயல்படுவதை உறுதி செய்வதன் மூலம், காயல் நிலத்தின் முழு பரப்பையும் முறையாகப் பராமரிக்க வேண்டும். இந்த நிலங்களை ஆக்கிரமிப்புக்கு விடக்கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்திய புள்ளியல்துறை வளாகம் கட்டுவதற்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தருமாறு உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பை எழுதிய நீதிபதி பரத சக்கரவர்த்தி, நீர் ஆதாரங்கள் மற்றும் கால்வாய்களை அழியாமல் பாதுகாக்க உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை கண்மூடித்தனமாக தாரைவார்க்க அரசாங்கம் தொடர்ந்து ஈடுபடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. "இயற்கை சமீபத்தில் டிசம்பர் 2023 இல் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியது, இது போன்ற செயல்களின் அபத்தத்தை எடுத்துக்காட்டுகிறது," என்று நீதிபதி கூறினார்.

மேலும் சென்னை நகரம் முரண்பாடான இடமாக உள்ளது, இது வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளை பெரும்பாலான நேரங்களில் பாதிக்கிறது. சென்னை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மீண்டும் மீண்டும் வெள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இந்த காலங்களில் மில்லியன் கணக்கான வீடுகள் மற்றும் சொத்துக்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதே நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் கோடை காலங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய வழக்கில், ஐ.எஸ்.ஐ., மத்திய அரசின் நிதியுதவி பெறும் பொது நிறுவனமாக இருப்பதால், தாழ்வான சதுப்பு நிலத்தை குப்பைகளால் நிரப்பி, ஈர நிலத்தை அழித்து, தங்களது நிறுவனத்தின் சென்னை வளாகத்தை கட்ட திட்டமிட்டிருக்கக் கூடாது, என நீதிபதிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment