கோவை மேயருக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்கள் பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு தந்ததை போன்று தான் கருதுவதாக கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அ.தி.மு.க உறுப்பினர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மாநகராட்சியின் 47 வது வார்டு மாமன்ற உறுப்பினரான அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பிரபாகரனை அடுத்த மூன்று கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவிற்கு எதிராக பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கின் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது மேயரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தும் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் மன்ற கூட்டங்களில் பங்கேற்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே நீதிமன்றத்தின் உத்தரவு தனக்கு மக்கள் பணியாற்றுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தந்ததாகவே கருதுகிறேன் என மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் கோவை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் நிதிக்குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே நிதி தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றியதாக கூறி தி.மு.க.,வை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களே கூட்டத்தில் பிரச்சனையில் ஈடுபட்டதாகவும் ஆனால் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் பிரச்சனைக்காக குரல் எழுப்பிய தன்னை அவர் மேயராக பங்கேற்ற முதல் கூட்டத்திலேயே சஸ்பெண்ட் செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன, எந்த பணிகளும் சரியாக நடைபெறவில்லை என்று தான் குற்றச்சாட்டை முன்வைத்த போது தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டல தலைவர் ஒருவர் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பத்தாண்டுகளாக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என கூறியதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பேசியதற்காகவே மண்டல தலைவரின் வலியுறுத்தலுக்கு இணங்க மேயர் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்ததாகவும் பிரபாகரன் கூறினார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கோவை மாநகராட்சியில் எந்த வார்டு பகுதியில் மக்கள் பிரச்சனை இருந்தாலும் அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் குழு தலைவராக உள்ள தான் மக்கள் பிரச்சினைகளை நிச்சயமாக மாமன்ற கூட்டத்தில் எழுப்புவேன், மக்களுக்காக போராடுவேன் எனவும் பிரபாகரன் உறுதிபட கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“