கர்மாவை மேற்கோள் காட்டி நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் முருகன். பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாகவும், உரிய தகவல் இன்றி விடுப்பு எடுத்ததாகவும் கூறி காவலர் முருகனுக்கு 18 முறைக்கும் மேல் மெமோ வழங்கப்பட்டது. மேலும் அவர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். இதனை எதிர்த்து காவலர் முருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க நிர்வாகி சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்த நித்தியானந்தா
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி, கர்மா அடிப்படையில் காவலர் முருகன் பல தண்டனைகளை அனுபவித்துவிட்டார் எனக்கூறி பணியிட மாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அப்போது, சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா என இரண்டு ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பிராரப்த கர்மாவுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. பிராரப்த கர்மா அடிப்படையில் மனுதாரர் பல தண்டணைகளை அனுபவித்துவிட்டார் என்று நீதிபதி ஸ்ரீமதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். மேலும், மதுரை போக்குவரத்து பிரிவில் காவலர் முருகனை பணியமர்த்தக் கூறியும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்மா என்ற காரணத்தைக் கூறி அரசு ஊழியரின் தண்டனையை ரத்து செய்ய முடியாது என அரசு தரப்பு வாதம் செய்தது. மேலும், ஒரு குறிப்பிட்ட நபரை குறிப்பிட்ட இடத்திற்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil