பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு இடைக் கால ஜாமீன் வழங்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்பவர் சிவநேசன், அதே பள்ளியில், 6 வகுப்பு படிக்கும் மாணவிக்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வகுப்பு அறையில் வைத்து சிவநேசன் பாலியல் கொடுமை செய்தார்.
இதுகுறித்து, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறை சிவநேசனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆசிரியர் சிவநேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
புதுவை நீதிமன்றம் தண்டனையை எதிர்த்து சிவநேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஆசிரியர் என்பவர் கடமை என்பது கல்வியை மட்டும் போதிப்பது அல்ல. மாணவர்களுக்கு கல்வியுடன், ஒழுக்கத்தையும் சேர்த்து போதிக்க வேண்டும். ஆசிரியர் என்பவர் மாணவர்களின் முன் மாதிரியாக இருக்கவேண்டும். அதனால், இந்த ஆசிரியருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.