இரு பிரிவினருக்கிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசிய இயக்குநர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரித்து புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஜனவரி 18ஆம் தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்து மத கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என விமர்சித்தும், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையெடுக்கவும் தயங்க மாட்டோம் என பேசியுள்ளார்.
இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாரதிராஜாவுக்கு எதிராக ஜனவரி 19ஆம் தேதி இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பாரதிராஜா மீதான புகாரில் விசாரிக்கவும், விசாரணையில் அந்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிந்தால் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.