/tamil-ie/media/media_files/uploads/2019/05/z673.jpg)
school vans cctv and gps
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கட்டாயம் பொறுத்த உத்தரவிடவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் கோபி கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் வாகனத்தில் வந்த நான்கு வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக நடத்துனர் கைது செய்யபட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள், மூலமாக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. இது போல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது போன்ற குற்றங்களை தடுக்கவும், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யவும் பள்ளி வாகனங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தேன். ஆனால் இதுவரை எனது கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் எனவும் மாணவர்களின் பயணத்தை பெற்றோர்கள் இணையதளம் மூலமாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.