தனக்கு கல்வி கற்றுக் கொடுத்த தலைமை ஆசிரியரையே மோசடி செய்த உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி தலைமையாசிரியர் தாக்கல் செய்த மனு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அரசு தரப்பில் தகவல் வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நான் மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கூடல் புதூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரியும் ஜெயராஜ் எனது மாணவர். எனது ஓய்வூதிய தொகையை கொண்டு நிலம் வாங்க முடிவு செய்த போது, ஜெயராஜ் இடம் வாங்கி தருவதாக கூறி என்னிடமிருந்து 24 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டார்.
பின்னர் இடத்தையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் என்னை மிரட்டியதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். உதவி காவல் ஆணையர் விசாரித்த போது பணத்தை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்ததோடு, காசோலைகளையும் வழங்கினார். ஆனால் அந்த காசோலைகள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. இதற்கிடையே ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே எனக்குக் கொடுக்க வேண்டும் என ஜெயராஜ் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இவ்வாறு தவறான தகவலோடு வழக்கு தொடர்ந்திருக்கும் ஜெயராஜ் மீது துறை ரீதியான மற்றும் குற்றவியல் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே எனது மனுவின் அடிப்படையில் கூடல் புதூர் உதவி காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தனபால், முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.