சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டதையடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினசரி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2,500க்குள் பதிவாகி வருகிறது. தமிழக அரசு தீவிரமாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த, 7 மாதங்களில் மருத்துவர்கள், காவல்துறையினர், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அம்ரீஷ்வர் பிரதாப் சாஹிக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி ஏற்பட்டதையடுத்து அவர் இன்று சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஐபிகள் பலரும் சென்னையில் பிரபலமான தனியார் மருத்துவமனைகளை சிகிச்சைக்காக நாடும் நிலை இருக்கிறது. இந்தச் சூழலில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் அரசு மருத்துவமனையில் சேர்ந்து இருப்பது அதிகாரிகள் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"