நீதிமன்றத்தின் தீர்ப்புரை தாய்மொழியான தமிழில் எழுதும் காலம் விரைவில் வரும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு அருகில் உள்ள புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி, கடந்த பிப்ரவரி மாதம் 9 முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாட்டு அளவில் நடைபெற்ற இந்த போட்டியில், 22 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளை சேர்ந்த 66 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியின் நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பங்கேற்றார்.
தமிழகத்தில் முதன்முறையாக, மாதிரி நீதிமன்ற போட்டிகள் தமிழ் மொழியில் தற்போதுதான் நடைபெற்றுள்ளது. இது மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்று கூறினார்.
மேலும், “நாமும் தமிழிலே வழக்காடுவோம், தமிழிலேயே சிந்திப்போம். தமிழில் தீர்ப்புரை எழுதும் காலம் விரைவில் வரும். தமிழில் வாதங்கள் வரத் தொடங்கினால் வழக்காடிகளே வாதிட்டு வழக்கில் வெற்றி பெறுவார்கள். இதன் காரணமாக அப்பீல் வழக்குகள் குறைந்து நீதிமன்றத்தின் சுமை குறையும்”, என்று அவர் கூறினார்.