/indian-express-tamil/media/media_files/YFkuZPyIqjOPaHSNpM0k.jpg)
இதைக்கேட்ட நீதிபதி குறுக்கிட்டு, "மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினார்.
அரசு அலுவலகங்கள் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் காவல்துறைக்கு கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு மற்றும் சாதிய ரீதியிலான அவதூறு தொடர்பான வழக்கில், காவல்துறை ஆய்வாளரின் அணுகுமுறையை நீதிபதி கேள்விக்குள்ளாக்கினார்.
சென்னை நொளம்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு நடந்ததாக, நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்குப் பதிலடியாக, குடியிருப்பு உரிமையாளர்களில் ஒருவர் வாட்ஸ்அப் குழுவில் சாதி ரீதியிலான கருத்துகளைப் பதிவு செய்து, வானமாமலையை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றபோது, தன்னை அவமானப்படுத்திய காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வானமாமலை தேசிய பட்டியலின ஆணையத்திற்கு மனு அனுப்பினார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்னை காவல்துறைக்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தேசிய பட்டியலின ஆணையத்தின் அறிவிப்பின் அடிப்படையில், நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வானமாமலை வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (23.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதைக்கேட்ட நீதிபதி குறுக்கிட்டு, "மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், காவல் ஆய்வாளரின் செயல் குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி, "காவல் ஆய்வாளர் முன்பு அமர்வதற்கு புகார்தாரருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெள்ளை சட்டையுடன் வந்தால்தான் சிவப்பு கம்பள வரவேற்பு தருவீர்களா? அழுக்கு சட்டையுடன் வந்தால் புகாரை ஏற்கமாட்டீர்களா? அவர்கள் வாக்களித்தால் அந்த வாக்கை எண்ண மாட்டீர்களா? மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு, நீங்கள் சொல்பவர்தான் இருக்கையில் அமர வேண்டுமா? மற்றவர்கள் அமரக்கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார்? அரசு அலுவலகம் அனைத்து மக்களுக்குமானது" என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது காவல்துறை தரப்பில், "சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.