நிவாரண உதவிகளை வழங்க தடையை எதிர்த்து வழக்கு - வைகோ நேரில் ஆஜர்
Chennai high court : திமுக தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்குக்கும் பொருந்தும் எனக் கூறிய நீதிபதிகள், வைகோ தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அரசியல் கட்சியினரும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நேரடியாக வழங்க தடை விதித்த உத்தரவை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்களை நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நேரில் ஆஜரான வைகோ, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில், உணவுப்பொருள்களை நேரடியாக வழங்க மூன்று பேருக்கு மட்டும் அனுமதி என்பது சிக்கலானது எனவும், உணவு வழங்கும் நேரத்தை மாலை 4 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உணவு வழங்க 3 பேருக்கு மேல் அனுமதிப்பது என்பது 144 தடை உத்தரவுக்கு எதிரானது என குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு வழங்க இயலாவிட்டால் கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம் என நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
பின்னர், திமுக தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்குக்கும் பொருந்தும் எனக் கூறிய நீதிபதிகள், வைகோ தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil